இளம் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பெற்ற தந்தையாலேயே சரமாரியாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி. மகளைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுத்த தந்தையின் பகீர் வாக்குமூலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
பயங்கர சத்தத்துடன் வெடித்த துப்பாக்கி…. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்… ரத்த வெள்ளத்தில் சரிந்த விழுந்த இளம்பெண்…. என எல்லாம் ஒரு நொடிக்குள் முடிந்து விட்டது. ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டவர் இளம் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்…
ஹரியானா மாநிலம் குருகிராமில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தீபக் யாதவ் என்பவருடைய மகளான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடி பல்வேறு பதக்கங்களைப் பெற்றவர்.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 113-வது இடத்தை தக்கவைத்திருந்தவர். தோள்பட்டை காயத்தால் டென்னிஸ் விளையாடுவதைத் தள்ளிப்போட்ட ராதிகா, ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் டென்னிஸ் அகாடமியை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தியும் வந்துள்ளார். இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதிலும் அவருக்கு அலாதி பிரியம்..
சம்பவத்தன்று, வீட்டில் முதல் மாடியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு,வெவ்வேறு அறைகளிலிருந்த தாயும், சகோதரர்களும் பதறியபடி ஓடிவர, சமையலறையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார் ராதிகா யாதவ். தந்தை தீபக் யாதவின் கைகளில் துப்பாக்கி இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக ராதிகாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
தகவலறிந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். தனது மகளைத் தாம் தான் கொலை செய்ததாகத் தந்தை தீபக் யாதவ் ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மகள் வருமானத்தில் வாழ்கிறாய் என ஊரார் கேலி பேச, அது தீபக் யாதவிக்கு வெந்நீர் ஊற்றியது போல் சுட்டிருக்கிறது. கூடவே ராதிகா ரீல்ஸ் போடுவதும், தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை.
டென்னிஸ் அகாடமியை மூடுமாறு பல முறை ராதிகாவை வற்புறுத்தியிருக்கிறார். ரீல்ஸ் போடுவதைத் தவிர்க்குமாறு கண்டித்திருக்கிறார். ஆனால் அதற்கு ராதிகா செவிசாய்க்கவில்லை. சம்பவத்தன்று சமையலறையில் ராதிகா சமைத்துக் கொண்டிருந்தபோது, தீபக் யாதவ் அதே விஷயத்தை மீண்டும் பேச, இருவருக்கும் வாய்த் தகராறு முற்றியிருக்கிறது.
ஆத்திரமடைந்த தீபக் யாதவ் கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண் இமைக்கும் நொடியில் ராதிகாவை குறிவைக்க, குண்டுகள் அசுர வேகத்தில் பாய்ந்தன. இதைச் சற்றும் எதிர்பாராத ராதிகா உடலை அடுத்தடுத்து 3 குண்டுகள் துளைத்ததில், குருதி பெருக்கோடு, சரிந்து விழுந்தார். தீபக் யாதவின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
ஊராரின் கேலிப் பேச்சை உதறித் தள்ளுவதை விட்டுவிட்டு, தனது ஆசை மகளை அடியோடு சாய்த்த தந்தையின் கொடூரச் செயல் ஹரியானா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.