பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டின் பீல்ட் மார்ஷல் அசிம் முனிர் ஆடம்பரமான இலங்கை சுற்றுப் பயணத்துக்குத் தயாராகி வருகிறார். சிறப்புச் சொகுசு ஜெட் விமானம், 5-நட்சத்திர சொகுசு ஹோட்டல் என அசிம் முனீரின் இலங்கை பயணம், ஏழை பாகிஸ்தான் மக்களின் வரிப்பணத்தில் ஒரு ஆடம்பர சுற்றுலா என விமர்சிக்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷலும், ராணுவத் தலைவருமான அசிம் முனீர் வரும் ஜூலை 20ம் தேதி, அரசுமுறை பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். பாகிஸ்தான் உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அசிம் முனீரின் பயணத் திட்டம் ஒரு கோடீஸ்வர சுற்றுலாப் பயணியைப் போல அமைத்துள்ளது.
ஒரு சிறப்பு ஜெட் விமானத்தில் பறப்பார். பைக் எஸ்கார்ட்கள் வரவேற்க, செல்வார். கொழும்பின் மிகவும் உயர் ரக ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டலில் தங்குவார். ஆடம்பரமான உள்ளுர் நகர சுற்றுப்பயணங்கள் செல்வார். இலங்கையின் புகழ்பெற்ற (Sigiriya Rock Fortress) சிகிரியா பாறை கோட்டை மற்றும் (Adam’s Peak) ஆதாமின் சிகரம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் சவாரிகள் மேற்கொள்வார் எனப் பயணத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்துள்ள பாகிஸ்தான் அரசு, ஆடம்பர ஹோட்டல்களில் தங்குவதையும், அனைத்து அத்தியாவசியமற்ற செலவுகளையும் முடக்கியுள்ளது. ஆனால் வெளிப்படையாக, இந்த விதிகள் எதுவும் தனக்கில்லை என்ற நிலையில், பாகிஸ்தானின் அசிம் முனீர் தனது இலங்கை பயணத்தை ஆடம்பரமாகத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்தும் கண்டித்தும் பதிவிட்டு வருகின்றனர். “உடைந்த முதுகில் மகிழ்ச்சிப் பயணம்” மற்றும் “தேசிய வலியைக் கேலி செய்வது” என்றும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
உயர் பதவி சலுகையை ஆடம்பரமாகப் பயன்படுத்தியதற்காக, அசிம் முனீர் விமர்சனத்திற்கு உள்ளாவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான சந்திப்புக்குச் சற்று முன்பு, ஒரு உயர்நிலை அமெரிக்க மாலில் ஷாப்பிங் செய்வதைக் கண்டு, பாகிஸ்தானியர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தைக் காட்டியிருந்தனர்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியில் உள்ளது. அதன் வெளிநாட்டுக் கடன் சுமார் 133 பில்லியன் டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. வேலையின்மை மற்றும் வறுமை அதிகரித்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் கடன்களைத் திருப்பி செலுத்துவதற்காகச் செலவழிக்கப் படுகிறது. பல லட்சக் கணக்கான பாகிஸ்தான் மக்களுக்கு அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை குறித்து உலக வங்கி எச்சரிக்கிறது.
பெரும்பாலான பாகிஸ்தான் குடும்பங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட கிடைக்காமல் தத்தளிக்கின்றன. சாதாரண குடிமக்கள் மானிய விலையில் மாவுக்காக வரிசையில் நிற்கும்போது, இராணுவத் தளபதி அசிம் முனீர், இலங்கைக்குச் சொகுசு சுற்றுலா செல்வதில் மும்முரமாக உள்ளார்.
முனீரின் வெளிநாட்டுப் பயணங்களை ராஜதந்திர போர்வையில் ஒரு சீரழிவு என்று குறிப்பிட்டுள்ள ஊடகங்கள், சாதாரண குடிமக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கும் அரசு, இராணுவத் தலைவர் மட்டும், இஷ்டத்துக்கு நாட்டின் கருவூலத்தைக் காலி செய்வதைக் கொண்டு கொள்ளாமல் உள்ளது என்று விமர்சித்துள்ளன.