ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, பல மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்குக் குழந்தைப் பேறுக்காகவும், குழந்தை வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
2023ம் ஆண்டில் ரஷ்யாவின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்குச் சராசரியாக 1.41 என்ற அளவிலேதான் இருந்தது. இது நாட்டின் மக்கள் தொகையைத் தக்க வைக்கும் 2.05 விகிதத்தை விடக் குறைவாகும். ரஷ்யாவில் மக்கள் தொகையைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எடுத்துக்காட்டாக, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுள்ள பெண்களுக்கு, சோவியத் யூனியனின் அதிபர் ஸ்டாலின் காலத்தில் கொடுக்கப்பட்ட தாய்மை பதக்கத்தை அதிபர் புதின் மீண்டும் கொண்டுவந்துள்ளார்.
பிரசவத்தைத் தாமதப்படுத்தும் அல்லது அதை முற்றிலுமாக நிராகரிக்கும் பெண்கள் மீதான மறைமுகமான அல்லது வெளிப்படையான பிரச்சாரத்தையும் ரஷ்யா தடை செய்துள்ளது. பெண்ணிய உரிமை என்ற பெயரில் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் பிரச்சாரத்தைத் தடை செய்து கடந்த ஆண்டு ரஷ்ய நாடாளுமன்றம் புதிய சட்டத்தை நிறைவேற்றியது.
தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்பு மீதான கட்டுப்பாடுகள், திருமணம் மற்றும் குழந்தை வளர்ப்பை முன்னுரிமைப்படுத்துவதற்குப் பதிலாகப் பல்கலைக்கழகத்தில் படிக்கவும் தொழில்களைத் தொடரவும் தேர்வு செய்யும் பெண்களிடம் மூளைச் சலவை செய்வது போன்ற நடவடிக்கைகளைத் தண்டனைக்கு உரியக் குற்றமாக இந்த சட்டம் தெரிவிக்கிறது.
இந்நிலையில்,ரஷ்யாவின் பல மாகாணங்களில், குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது .
பள்ளியில் படிக்கும்போதே குழந்தைகளைப் பெற, பெண்களுக்கு அரசே பணம் கொடுக்கும் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தை, 43 சதவீத ரஷ்யர்கள் ஆதரிப்பதாகவும், 40 சதவீத ரஷ்யர்கள் எதிர்ப்பதாகவும் ரஷ்ய பொதுக் கருத்து ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு பெரிய மக்கள்தொகையை, ஒரு செழிப்பான பெரும் சக்தியின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதும் ரஷ்ய அதிபர் புதின், அதிகமான மக்கள்தொகை சக்திவாய்ந்த ராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் என்றும் நம்புகிறார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கை, நாட்டில் மக்கள்தொகை குறைவதற்கான காரணம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். உக்ரைன் போரில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கட்டாயமாகப் போர் காலத்துக்குச் செல்லவேண்டிய சூழலில், லட்சக் கணக்கான படித்த ரஷ்ய மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மக்கள் தொகை சரிவது ஒரு பக்கம், போரில் உயிர்நீத்த ரஷ்யப் படைவீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மறுபக்கம் என ரஷ்யா நெருக்கடியில் உள்ளது போலவே, அமெரிக்கா உட்படப் பல உலக நாடுகளிலும் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது.
2050 ஆம் ஆண்டில், உலகின் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் மக்கள்தொகையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு மிகக் குறைந்த கருவுறுதல் அளவைக் கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தாராளமான வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களை ஹங்கேரி அரசு வழங்கி வருகிறது. இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தம்பதியருக்கு, ஒரு குழந்தைக்கு மாதந்தோறும் 11,857 ரூபாய் உதவித்தொகையாக போலந்து அரசு வழங்கி வருகிறது.
குழந்தை பெற்றெடுக்கப் பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்துடன், தனது நாட்டுக்குக் குடியேறும் வெளிநாட்டு மக்களுக்கு, குடியுரிமை அந்தஸ்து வழங்குவதை ஸ்பெயின் அரசு அதிகரித்துள்ளது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கும் இந்தச் சலுகையை ஸ்பெயின் அரசு தாராளமாக வழங்குகிறது. இந்த திட்டத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து வரும் ஸ்பானிஷ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில், குழந்தைப் பேறு அமையும் பெண்களுக்கு 4.2 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை,அரசு கையில் எடுப்பதும் ஆணையிடுவதும், கட்டுப்படுத்துவதும் சரியானதா என்ற கேள்வியை சமூகவியல் அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.