நேபாளம் வழியாக இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, நேபாள அதிபரின் ஆலோசகர் சுனில் பஹதுார் தாபா எச்சரித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஊடுருவுவதற்கான மாற்று வழிகளை தீவிரவாதிகள் நாடத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அந்நாட்டு அதிபரின் ஆலோசகரான சுனில் பஹதுார் தாபா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது குழுக்கள், நேபாளத்தை ஒரு பயண வழியாக பயன்படுத்தி இந்தியாவை குறிவைக்க காத்திருப்பதாக தெரிவித்தார்.
எனவே, இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை எனவும் சுனில் பஹதுார் தாபா வலியுறுத்தினார். நேபாளத்துடன் ஆயிரத்து 751 கிலோ மீட்டர் தூர எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்ளும் நிலையில், குறைந்த இடங்களில் மட்டுமே சோதனைச்சாவடிகள் உள்ளதால் பயங்கரவாதிகள் எளிதில் ஊடுருவக்கூடும் என அஞ்சப்படுகிறது.