சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சியில் இடம்பெற்றிருந்த படைப்புகள் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. கண்காட்சி எனும் பெயரில் நடைபெற்ற ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் சங்கம நிகழ்வை இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உயிரற்ற கற்பனைகளுக்கு, உயிர்கொடுத்து வடிவமூட்டும் சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலைகளுக்கென்று தமிழகத்தில் நீண்ட நெடிய வரலாறு இருந்து வருகிறது. சிற்பக்கலைகளையும், ஓவியக்கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு கலைப்படைப்புகளும் காண்போரை மெய்சிலிர்க்கச் செய்துள்ளது. இந்திய கலாச்சாரப் படி திருமணமான பெண், கோட்டைக்கு முன் இருக்கும் வனப்பகுதியில் புள்ளி மானுடன் அமர்ந்திருப்பது போன்ற ஓவியம், வீட்டின் அருகே மேய்ந்துக் கொண்டிருந்த ஆட்டுக் குட்டிக்கு உணவு கொடுக்கும் சிறுமியின் ஓவியங்கள் உயிர்ப்புடன் இருந்தன.
அதே போலச் சிறந்த சிந்தனை அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த சிட்டுக்குருவியின் உலக ஓவியம் பார்வையாளர்களுக்குப் புதுவித அனுபவத்தைக் கொடுத்தது. . சிவபெருமான் மீது, பிள்ளையார் உட்கர்ந்து நடனமாடுவது போன்ற சிற்பம் பல வேலைப்பாடுகளுடன் மகாபலிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இந்தச் சிற்பம், சிறந்த கலைப்படைப்புக்கான விருதினை பெற்றுள்ளது.
மரத்தால் செய்யப்பட்டு வண்ணம்பூசப்பட்ட பஞ்சவர்ணக் கிளி, இந்து கலாச்சார முறைப்படி பெண்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு, பிரசாதத்துடன் வெளியேறும் ஓவியம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தருணத்தைச் சித்தரிக்கும் விதமாகக் காட்சி படுத்தப்பட்டிருந்தன.
கர்பிணிப் பெண் நீருக்குள் மூழ்கியவாறே தன் குழந்தை எப்படி இருக்கும் எனும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற கற்பனை ஓவியம் பெண்களுக்கான தனி ஃபேவரிட் ஓவியமாக மாறிப்போனது. இதனைக் கல்லூரி மாணவி ஒருவர் அழகாக வரைந்து, தன் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
பல தெய்வங்கள், கிரியேட்டிவ் சிற்பங்கள் என ஒவ்வொன்றும் விலைமதிப்பு மிக்க உருவாக்கத்தை பெற்றிருந்தன. உலகப் புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைத் தத்ரூபமாக ஆயில் பெயிண்டிங் செய்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஜீவன்.
ஒருபக்கம் ஓவியர்கள், மறுபக்கம் சிற்பக் கலைஞர்கள் எனக் காண கிடக்காத சங்கமமாக நிரம்பிப் போனது சென்னை எழும்பூர் அருங்காட்சியகம். சிற்பத்தின் மீதும் ஓவியத்தின் மீது அதீத பற்று கொண்டிருக்கும் பார்வையாளர்களின் கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்குள்ளும் பரவசத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தக் கண்காட்சி.