விக்கிரவாண்டி அருகே மது போதையில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசு – லாவண்யா தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன், தம்பதி இடையே ஏற்பட்ட தகராறின்போது மது போதையில் இருந்த தென்னரசு, மனைவி லாவண்யாவை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
சண்டையை தடுக்க முயன்ற தாய் பச்சையம்மாள், உறவினர் கார்த்திக் ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவர் தப்பியோடி விட்டார். இதில், படுகாயமடைந்த 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தலையில் படுகாயமடைந்த கார்த்திக், லாவண்யா ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்த நிலையில், தப்பியோடிய தென்னரசுவை போலீசார் தேடி வருகின்றனர்.