மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் அமைப்பை சேர்ந்த 3 தலைவர்கள் கொல்லப்பட்டதாக, உல்ஃபா அமைப்பு தெரிவித்துள்ளது.
உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு, மியான்மர் எல்லையில் இருந்தபடி பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மியான்மரில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை, இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. 150க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் தங்கள் அமைப்பின் லெப்டினன்ட் ஜெனரல் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் உல்ஃபா அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இதுவரை கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.