பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாகப் பெங்களூருவில் காலமானார்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்து அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி, கடந்த 1955ஆம் ஆண்டு மகாதேவி காளிதாசா என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
1958ஆம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், எம்ஜிஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, தமிழ் – கன்னட திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றவர்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், மாநில அரசுகளின் விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ள நடிகை சரோஜா தேவி, கடைசியாகத் தமிழில் சூர்யாவின் ஆதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றிய நடிகை சரோஜா தேவி, பெங்களூருவில் வயது முதிர்வு காரணமாகக் காலமானார். நடிகை சரோஜாதேவியின் மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.