அடர்ந்த காட்டிற்கு நடுவே, ஆபத்தான குகையிலிருந்து இரு குழந்தைகளுடன் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் நடந்த திகிலூட்டும் சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் ரோந்து சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கோகர்ணா மலையில் ராமதீர்த்தா பகுதி அருகே உள்ள குகையில் காய வைக்கப்பட்டிருந்த துணிகளைக் கண்ட போலீசாருக்கு வியப்பு… ஆபத்தான காட்டுப் பாதை வழியாகக் குகையை நோக்கிச் சென்ற போலீசார், அங்கு பளீர் கண்கள், தங்க நிற கூந்தல் உடன் இருந்த சிறுமியைக் கண்டு தயங்கி நின்றனர்.
ஒருவழியாகச் சுதாரித்துக் கொண்டு குகையை அடைந்த போலீசார், அங்குத் தாயுடன், இரு குழந்தைகள் வசித்து வருவதைக் கண்டு அதிர்ந்து போயினர். அடர்ந்த காட்டிற்குள் இருக்கிறோம் என்ற அச்ச உணர்வே இல்லாமல் இருந்த அப்பெண்ணிடம், இங்கு இருப்பது ஆபத்தானது என்பதைப் புரிய வைக்கவே காவல்துறைக்கு நீண்ட நேரம் பிடித்துள்ளது.
இறுதியில் அவர் ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயதான நினா குடினா என்பதை அறிந்த போலீசார், அவருடைய 6 வயது மகள் பிரேமாவையும், 4 வயது மகள் அமாவையும் மீட்டு வனத்திற்கு வெளியே அழைத்து வந்தனர். ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்ட நினா குடினா, தனது குழந்தைகளுடன் 2 மாதங்களாகக் குகையில் தங்கியிருந்ததும், கிருஷ்ணன் சிலையை வைத்து வழிபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஒரு வாரத்திற்கு முன்பு, அவர் காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாங்கி குகைக்குச் சென்றதும், விறகுகளைப் பயன்படுத்திச் சமைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்து மதம், இந்திய ஆன்மீக மரபுகளால் மீட்கப்பட்ட நினா குடினா, 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் தங்கியிருக்கிறார். அவரது விசா 2017ம் ஆண்டே காலாவதியாகியன நிலையில், நேபாளத்திற்குச் சென்ற அவர், 2018 செப்டம்பர் 8ம் தேதி மீண்டும் இந்தியா திரும்பி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரஷ்ய பெண் நினா மிடினா, அவரது குழந்தைகளைப் பாதுகாப்பாகத் தங்க வைத்த போலீசார், இதுதொடர்பாக ரஷ்யத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். காட்டிலிருந்து வெளியே வந்தது குறித்து நினா குடினா எழுதியுள்ள கடிதத்தில், வசதியான, சுகமான வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மீண்டும் சாத்தான் வென்றுவிட்டடதாகவும் கூறியிருக்கிறார்.
நினா குடினாவில் மகள்கள் இந்தியாவில் பிறந்ததாகவும் கூறும் போலீசார் அவர்களைப் பாதுகாப்பாக ரஷ்யாவுக்கு திரும்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.