திருவள்ளூர் அருகே நடைபெற்ற ரயில் விபத்தில் பரவிய கரும்புகையால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கண் எரிச்சலாலும், மூச்சுத்திணறாலும் சிரமத்திக்குள்ளாகி உள்ள மக்களுக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித உதவியும் செய்யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
சென்னை மணலியிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு மைசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் திருவள்ளூரைக் கடந்த போது எதிர்பாரா விதமாகத் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
எண்ணெய் டேங்கர்களில் ஏற்பட்ட உராய்வால் ஒரு டேங்கரில் பற்றிய தீ அடுத்தடுத்த டேங்கர்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. காவல்துறை, தீயணைப்புத்துறை, ரயில்வேத்துறை, தேசிய பேரிடர் மீட்பு படை என பல்வேறு துறையினர் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ரயிலில் பற்றி எரிந்த தீ அணைந்து ரயில் போக்குவரத்து சீரானாலும், கரும்புகையால் ஏற்பட்ட சிரமத்திலிருந்து மீளமுடியாமல் அப்பதி மக்கள் தவித்து வருகின்றனர்.
அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் வானுரய அளவிற்குப் பரவிய கரும்புகை அருகிலிருந்து குடியிருப்புகளையும் முழுமையாகச் சூழ்ந்தது. என்ன நடக்கிறது என்பதை அறியாத பொதுமக்கள் உயிருக்குப் பயந்து தங்களின் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் ஓடியுள்ளனர். தீ விபத்தைத் தடுப்பதில் செலுத்திய கவனத்தை, பாதிக்கப்பட்ட தங்களின் மீது செலுத்தவில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்
ரயில் பாதைகளுக்கு அருகிலேயே வசிக்கும் பொதுமக்கள் ஒவ்வொரு ரயில் கடக்கும் போதும் ஏற்படும் அதிர்வுகளால் ஒருவித அச்ச உணர்வுடனே வாழ்ந்து வருகின்றனர். டேங்கர் லாரியிலிருந்து வெளிவந்த கரும்புகையால் இன்றளவும் கண் எரிச்சல் இருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற இடத்தில் வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவற்றைச் சிறிதளவும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், விபத்திற்குப் பின் தங்களைத் தேடி வந்து பார்ப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலிண்டர் பற்ற வைக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருப்பதால் உணவுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்து இரண்டு நாட்களைக் கடந்தும் அதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை என்பதை அப்பகுதி மக்கள் சந்திக்கும் சிரமங்கள் எடுத்துரைக்கின்றன. விபத்து நடைபெற்றவுடன் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் ஒரு மருத்துவ முகாமை அமைத்து உரியச் சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது