பீகார் மாநில வாக்காளர் பட்டியலில், நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இருப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில், தற்போது பீகாரில் வாழும் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பீகார் மாநிலச் சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில், கடந்த ஜூன் 25ம் தேதி பீகாரில் “சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” தொடங்கும் என்றும், தகுதியுள்ள அனைத்து குடிமக்களின் சேர்க்கையை உறுதி செய்வதற்காக “வீடு வீடாகச் சரிபார்ப்பு” நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், இறுதிப் பட்டியல் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் விடுபட்டிருக்கக்கூடாது. அதே நேரத்தில் தகுதியற்ற எந்தவொரு நபரும் சேர்க்கப்படக்கூடாது. வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான செயல்பாட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவது. இந்த நோக்கங்களுக்காகவே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு நடவடிக்கையை எதிர்த்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிர ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. காங்கிரஸின் கே.சி. வேணுகோபால், திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா, ஆர்ஜேடியின் மனோஜ் குமார் ஜா, மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தனித் தனியே வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஜூலை 10 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய்மாலியா பக்ஷி அமர்வு, இந்த வழக்கை விசாரித்தனர். தலைமைத் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடர இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளித்தது.
மேலும், வாக்காளர் அடையாளத்துக்கான செல்லுபடியாகும் ஆவணங்களாக ஆதார்,வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் அட்டையைப் பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
ஜூலை 12 ஆம் தேதி நிலவரப்படி, பீகாரில் 80.11 சதவீத வாக்காளர்கள் தங்கள் படிவங்களைச் சமர்ப்பித்ததாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் ஜூலை 25 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே கணக்கெடுப்பு படிவங்களைச் சேகரிக்கும் பணியை முடிக்கத் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
வீடு வீடாகச் சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மேலும், இந்த நபர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, ஆதார், இருப்பிடச் சான்றிதழ், ரேஷன் அட்டைகள் உள்ளிட்டவற்றை வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு, ஆவணமற்ற நபர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது, வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக டெல்லியில் குடியேறியவர்களின் பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
பீகார் மாநில வாக்காளர் பட்டியலில், நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இருப்பது, மேற்கு வங்கத்தில் அரசியல் விவாதங்களைத் தூண்டிவிட்டுள்ளன.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, நாடாளுமன்றத்தில், வங்கதேச மற்றும் இந்திய வாக்காளர் பட்டியல் இரண்டும் தம்மிடம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்ததைக் குறிப்பிட்டு, வங்கதேச வாக்காளர் பட்டியலை” தயாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் மால்வியா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே கருத்தை வலியுறுத்திய, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி, மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் போலியான மற்றும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் பெயர்கள் அதிகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக Cooch Behar கூச் பெஹார் மற்றும் 24 Parganas 24 பர்கானாக்கள் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில், பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் இதுபோன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.