தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுகளை நிலுவையில் வைத்திருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டைக் காவல் துறையினர் இதுநாள் வரை அமல்படுத்தாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்களை நிலுவையில் வைத்திருப்பது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
அத்துடன் பிடிவாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்கக் காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஜூலை 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக டி.ஜி.பி.க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டார்.
அதேபோல, தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் அமல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து ஜூலை 23 ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.