மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை காவலர்களால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் மானாமதுரை டிஎஸ்பி ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மடப்புரம் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீசார் கொடூரமாகத் தாக்கிய காட்சிகள்தான் இவை…. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த ஜூன் 28ம் தேதி திருட்டுப் புகாரில் சட்டவிரோதமாகக் காவலில் எடுத்த தனிப்படை, அவரை சித்ரவதை செய்து அடித்தே கொன்றது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளின் தலையீடு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அஜித்குமார் கொலை வழக்கு பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளானது.
நெருக்கடி அதிகரித்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கை வேறு வழியின்றி சிபிஐ-க்கு மாற்றியது தமிழக அரசு. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், அஜித்குமார் தாக்கப்பட்ட இடம், கோசாலை, கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் அவர்கள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் வந்து விசாரணை மேற்கொண்டது திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 28ம் தேதி அஜித்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போராட்டங்கள் நடத்தி இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம், உங்களுக்கு வேண்டியதைச் செய்கிறோம், பணம் தருகிறோம் என ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார் டிஎஸ்பி. மண்டபத்தை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதை அப்பகுதி மக்கள் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த நிலையில், அந்த காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பைக் கூட்டியுள்ளன.
இந்த வீடியோ காட்சிகள் சிபிஐ விசாரணைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.