சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்தனர்.
ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள், கடந்த ஜூன் 25-ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்த பயணத்தில், நான்கு பேர் கொண்ட குழுவினர் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவர்களது பயணம் நிறைவடைந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம் பூமிக்கு வந்தடைந்தனர். 22 மணிநேர பயணத்திற்குப் பின் டிராகன் விண்கலம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு அருகில் உள்ள சான்டியாகோ கடற்பகுதியில் தரையிறங்கியது.
தொடர்ந்து கடற்பகுதியில் தரையிறங்கிய டிராகன் விண்கலத்தைக் கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்பு கப்பலில் ஏற்றினர். பின்னர் டிராகன் விண்கலத்தின் கதவு திறக்கப்பட்டு முதல் வீரராக பெக்கி விட்சனும், இரண்டாவது வீரராக சுபன்ஷு சுக்லாவும் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து மற்ற விண்வெளி வீரர்களும் புன்னகைத்தபடி வெளியே அழைத்து வரப்பட்டனர். மேலும் இந்த பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று பூமிக்குத் திரும்பிய முதல் வீரர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.
டிராகன் விண்கலம் தரையிறங்கியதை சுபன்ஷு சுக்லாவின் பெற்றோர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேரலையில் பார்வையிட்டனர்.
அப்போது சுபன்ஷு சுக்லா பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியதைக் கண்டு அவர்களின் பெற்றோர் அனந்த கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து அவர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.