வட அமெரிக்க நாடான கனடாவில் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. டொரண்டோ நகரில் நடந்த பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் உலகளாவிய இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பூரி ஜெகந்நாதன் ரத யாத்திரை உலகின் மிகப் பழமையான தேர் திருவிழா ஆகும். இந்த தேரோட்டத்தில் ஜெகந்நாதரைத் தரிசிப்பது முக்தியை அளிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தனது சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்ராவுடன், பூரியில் இருந்து குண்டிச்சா கோயிலுக்கு வந்து ஒன்பது நாட்கள் தங்கும் பகவான் ஜெகந்நாதரின் தெய்வீகப் பயணமே இந்த ரத யாத்திரை ஆகும்.
ஆண்டுதோறும் பூரியில் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த ரத யாத்திரையில் உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெகந்நாதர் வழிபடுவார்கள்.
மேலும், பிறநாடுகளில் வாழும் இந்துக்களும் தங்கள் நாட்டில் ஜெகந்நாதர் ரத யாத்திரையைக் கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில், கனடாவில் வாழும் இந்துக்கள் இந்த ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
கடந்த திங்கட்கிழமை நடந்த ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள் மீது, அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து முட்டைகள் வீசப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து, ரத யாத்திரையில் கலந்துகொண்ட ஒரு பெண் பக்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலான அந்த வீடியோவில், ரத யாத்திரையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பக்திப் பாடல்களைப் பாடுவதையும், பகவானுக்கு வாழ்த்து சொல்வதையும், ஆனந்தமாக நடனமாடுவதையும் காண முடிகிறது. மேலும், யாரோ இங்கே முட்டைகளை எறிகிறார்கள் என்று கூறுவதையும், சாலைகளில் முட்டைகள் உடைந்து கிடப்பதையும் பார்க்க முடிகிறது.
டொரண்டோவில் ரத யாத்திரை ஊர்வலத்தின்போது சில விஷமிகள் இடையூறு ஏற்படுத்தியதை உறுதிப் படுத்தியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இத்தகைய வெறுக்கத்தக்கச் செயல்கள் வருந்தத்தக்கது என்றும், ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் திருவிழாவின் நோக்கத்துக்கு எதிரானது என்று தெரிவித்தார்.
மேலும், இத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, கனடா அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், மக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், இந்துக் கோயில்களைச் சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஏற்கெனவே ,ஏப்ரல் மாததத்தில், கனடாவின் சர்ரேயில் உள்ள லட்சுமி நாராயண் கோயில், காலிஸ்தான் பயங்கரவாதிகளால் சேதப் படுத்தப் பட்டது. கோவில் சுவர்களில், காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதி வைத்தனர். இதற்கு 20 நாட்களுக்கு முன்னதாக, கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயில் இரண்டு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
அதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகளில், இருவரும் முதலில் அப்பகுதியில் இருந்த PUBக்குச் செல்வதும் பின் அங்கிருந்து வெளிவந்து கோவிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்துவதும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம், பிரதமர் மோடி மற்றும் கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யாவைக் குறிவைத்து, இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பயங்கரவாதிகள் எட்மண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோயிலைச் சேதப்படுத்தப் படுத்தினர்.
கடந்த பிப்ரவரியில், ஓக்வில்லில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலைத் தாக்கி, அங்கிருந்த ஊழியர்களையும் பக்தர்களையும் தாக்கிவிட்டு, கோயில் நன்கொடை பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர் காலிஸ்தான் பயங்கரவாதிகள்.
இதேபோல், கடந்த நவம்பரில், கனடாவின் பிராம்ப்டனில் இந்து சபா கோயில் வளாகத்தில் பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்களில், காலிஸ்தான் கொடியேந்தியவர்கள், இந்து சபா கோயில் வளாக வாசல் அருகே பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அப்போதே நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு கனடா அரசிடம் பிரதமர் மோடி கண்டிப்புடன் தெரிவித்திருந்தார். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு, ஆதரவு அளிக்கும் கனடா அரசு, காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது.
இந்தியாவுக்கும், இந்துக்களுக்கும் எதிராகப் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளைத் தங்கள் நாட்டில் சுதந்திரமாகச் செயல்படக் கனடா அரசு அனுமதிக்கிறது.
நாட்டில் மூன்றாவது பெரிய மதமாக விளங்கும் இந்துமதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான இனவெறி தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த கனடா அரசு தவறி வருவதும் , பயங்கரவாதத்துக்குத் துணைபோவதும் இந்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.