உதகை அரசு மருத்துவமனைக்குக் காலில் சிறு காயத்துடன் வந்தவருக்கு மருத்துவர்கள் மாறி மாறி 4 முறை தவறான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரு மாதங்களுக்கு முன், பல்நோக்கு மருத்துவமனை முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் நோயாளிகள் உயர் சிகிச்சைகளுக்காகக் கோவை செல்லும் நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், கேத்தி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து, காலில் ஏற்பட்ட சிறு காயத்திற்குச் சிகிச்சை பெற உதகை பல்நோக்கு மருத்துவமனைக்குக் கடந்த 9-ம் தேதி வந்துள்ளார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காலில் நீர் கோர்த்துள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
பின்னரும் முத்திற்குத் தொடர்ந்து வலி இருந்து வந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி, அவரது காலில் மொத்தம் 4 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது கணவரின் காலை அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக முத்துவின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.