நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அப்போது, தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து நீதிபதிகள் பதவி நீக்கம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய வருமான வரி சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும் என நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு நிர்வாகம், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஆகிய திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி, தொழில் முனைவோர்கள் செய்யும் தவறுகளுக்கான தண்டனை ஆகிய திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மேலாண்மை நிறுவனம், இந்தியத் துறைமுக மசோதா உள்ளிட்ட 8 புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.