தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவும் இணையும் என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, இரு கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக்கூட்டணியில் பாமகவும் இணையும் பட்சத்தில் திமுகவை வீழ்த்துவதற்கான இலக்கு மேலும் எளிதாகும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் தலைப்பில் தமிழகத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் சுற்றுப்பயணத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயகக்கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிப்பதாகவும், அவர்களும் நம் கூட்டணிக்கு வருவார்கள் என அறிவித்தார்.
அவரின் இந்த அறிவிப்பு அதிமுக- பாமக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன், மனிதநேய மக்கள் கட்சி என ஏராளமான கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக முக்கிய அங்கமாக இருந்தது.
இம்முறை அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியிருக்கும் நிலையில், அக்கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் பாமக செல்வாக்குமிக்க கட்சியாகக் கருதப்படுகிறது.
அத்தகைய பாமகவைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் தமிழகத்தில் பரவலான வாக்குகளைப் பெறமுடியும் என அதிமுக நினைப்பதையே எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேச்சு வெளிப்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் எனவும், கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாமக ஆண்டுவிழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் கூட்டணி ஆட்சிக்கான அவசியத்தை உணர்த்தியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிலவும் தந்தை மகன் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் பட்சத்தில் பாஜக – அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு பாமக, தேசிய ஜனநாயகக்கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்திற்கும் எண்ணத்திற்கும் கூடுதல் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவை வீழ்த்துவதே பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒரே இலக்காக இருக்கும் நிலையில், பாமக உள்ளிட்ட மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது அந்த இலக்கை எட்ட எளிமையான பாதையை வகுத்துக் கொடுக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.