பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைப்பின் மறுவடிவமாக திகழ்ந்த தூயத் தலைவர் காமராஜர் பற்றி வந்துள்ள திருச்சி சிவாவின் விமர்சனங்கள் தேவையில்லாதது, அவசியமற்றது, கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர், நாட்டிற்காக சிறை சென்றும், பட்டி தொட்டிகளிலும், மரத்தடியிலும், கொட்டகைகளிலும் உறங்கியும், கால் கடுக்க நடந்தும், காங்கிரஸ் கட்சியை வளர்த்து தமிழகத்தில் காங்கிரஸின் உயிராய் திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அப்படிப்பட்ட புனிதரை ஏ.சி. இல்லாமல் தூங்க மாட்டார் என்பதைப் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை திருச்சி சிவா பேசியிருக்க கூடாது என்று கூறியுள்ள திருநாவுக்கரசர், திருச்சி சிவாவின் தேவையற்ற இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் சார்பிலும், தன் சார்பிலும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.