திருச்சியில் உள்ள திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மின்சார தட்டுப்பாடு எனக்கூறி தமிழகம் முழுவதும் கண்டன போராட்டங்களை நடத்திய காமராஜர், உடலில் ஏற்பட்டுள்ள அலர்ஜிக்காக தாம் தங்கும் பயணியர் விடுதிகளில் குளிர்சாதன வசதியைச் செய்ய உத்தரவிட்டதாகச் சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
மேலும், உயிர்பிரியும் முன்பு கருணாநிதியின் கைகளைப் பிடித்து தமிழகத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாகவும் பேசியிருந்தார்.
இதற்குத் தமிழக காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், காமராஜர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், தாம் பேசியதை விவாதப்பொருளாக்கிட வேண்டாம் எனவும் திருச்சி சிவா கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், திருச்சி நீதிமன்றம் வளாகம் எதிரே உள்ள வ. உ .சி சிலை முன்பு திருச்சி சிவாவுக்கு எதிராகக் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.