தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில் பதிலளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள வண்ணங்கள் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் தாங்கள் மட்டுமே சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்த உரிமம் உள்ளது எனவும் நடிகர் விஜய்யின் கட்சிக்கொடியிலிருந்து இந்த நிறங்களை அகற்றவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வர்த்தக முத்திரை என்பது வர்த்தக ரீதியாகத் தானே பொருந்தும், அரசியலுக்கு எப்படிப் பொருந்தும் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு நீதிபதி உத்தரவிட்டார்.