ஏமன் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது ? நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தாகுமா ? இதுபோல் வெளிநாட்டுச் சிறைகளில் எத்தனை இந்தியர்கள் உள்ளனர் ? என்பது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உலக அளவில் புலம்பெயர்ந்தோர் கணக்கீடு பதிவேட்டின் படி, ஒன்றே முக்கால் கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதில் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,இலங்கை, ஸ்பெயின், ரஷ்யா, இஸ்ரேல், சீனா, வங்கதேசம், அர்ஜென்டினா உள்ளிட்ட 86 நாடுகளில் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
பெரும்பாலும் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களே அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 86 நாடுகளில் உள்ள சிறைகளில் 10,152 இந்தியர்கள் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் உள்ளனர்.சுமார் 49 பேர் மரண தண்டனை கைதியாக உள்ளனர். பெரும்பாலோர் குவைத், நேபாளம், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா, உள்ளிட்ட 12 நாடுகளின் சிறைகளில் உள்ளனர்
அதிகபட்சமாக, சவுதி அரேபியாவில் 2,633 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,518 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரக அரசு மரணதண்டனை தரவுகளை வெளியிடவில்லை என்றாலும் 25 இந்தியக் கைதிகள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.
நேபாளத்தில்,1,317 பேரும் , பாகிஸ்தானில் 266 பேரும், சீனாவில் 173 பேரும், இலங்கையில் 98 பேரும் கத்தாரில் 611 பேரும் சிறையில் உள்ளனர். FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குப் பிறகு, கத்தார் சிறையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
தனிமனித உரிமை சட்டம் காரணமாக, கைதிகளின் தனிப்பட்ட விவரங்களைக் கத்தார் அரசு வெளியிடுவதில்லை. ஆகவே,கத்தார் சிறையில், எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.
வெளிநாட்டுச் சிறைகளில் உள்ள இந்தியக் கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் இந்திய அரசு, அவர்களுக்குத் தேவையான அனைத்து தூதரக உதவிகளையும் சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த உதவிகளை வெளிநாட்டுச் சிறையில் உள்ள அனைத்து இந்தியக் கைதிகளுக்கும் இலவசமாகவே இந்தியத் தூதரகம் செய்து வருகிறது.
மேலும், தண்டனை விதிக்கப்பட்ட இந்தியக் கைதிகளை இடம் மாற்றுவது தொடர்பாகப் பிரிட்டன்,ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஈரான், இஸ்ரேல், குவைத்,கத்தார்,இத்தாலி, உள்ளிட்ட 30க்கும் நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், வெளிநாடுகளில் உள்ள இந்தியக் கைதிகள் தங்கள் தண்டனையின் மீதமுள்ள காலத்தை அனுபவிக்க இந்தியாவுக்கு மாற்ற முடியும்.
2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து, அதிக எண்ணிக்கையிலான இந்தியக் கைதிகள் வெளிநாட்டுச் சிறைகளிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியைச் சந்திக்க இந்தியா வருவதற்கு முன்பாக, 850 இந்தியக் கைதிகளைச் சவூதி இளவரசர் விடுதலை செய்தார். அதே ஆண்டு பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, தங்கள் நாட்டுச் சிறையில் தண்டனை கைதிகளாக இருந்த 250 இந்தியர்களுக்கு பஹ்ரைன் அரசு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது.
கடந்த 2014 முதல் இன்றுவரை சுமார் 3,697 இந்திய மீனவர்களை இலங்கை விடுதலை செய்துள்ளது. அதேபோல், கடந்த 11 ஆண்டுகளில், 2,638 இந்திய மீனவர்களையும் 71 இந்தியக் கைதிகளையும் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சவுதி அரேபியா, குவைத் மற்றும் மலேசியாவில் சில இந்தியக் கைதிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் ஐந்து இந்தியர்கள் தூக்கிலிடப்பட்டனர்.மலேசியாவில் ஒரு இந்தியக் கைதிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டது.
கடந்த ஆண்டு குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் ஆறு இந்தியக் கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அதே ஆண்டு, ஜிம்பாபே நாட்டில் ஒரு இந்தியக் கைதி தூக்கிலிடப் பட்டார்.
கடந்த மார்ச் மாத கணக்கெடுப்பின்படி, எட்டு நாடுகளில் 49 இந்தியர்கள் மரண தண்டனையை எதிர்கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 பேர், சவுதி அரேபியாவில் 11 பேர், மலேசியாவில் ஆறு பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். குவைத், இந்தோனேசியா, கத்தார், அமெரிக்கா, ஏமன் ஆகிய நாடுகளில் 7 இந்தியக் கைதிகள் மரண தண்டனை பெற்றுள்ளனர்.
தொழிலாளர் தகராறு, திருட்டு போன்ற குற்றங்களால் இந்தியர்கள் அதிகளவில் தண்டனை பெற்று வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருப்பது, மற்றும் சட்டவிரோத கும்பலின் நெட்வொர்க்கில் சிக்கிக் கொள்வது போன்ற காரணங்களாலும் இந்தியர்களுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.
இந்திய அரசு, வெளிநாட்டுச் சிறையில் உள்ள கைதிகள் சட்ட மேல்முறையீடு செய்ய உதவலாம். கருணை மனுக்களை எளிதாக்கலாம். ஆனால் அந்தந்த நாட்டின் நீதித்துறை அல்லது தலைவரின் கையில்தான் இறுதி முடிவு உள்ளது. அப்படி ஒரு வழக்குதான், 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டுக்குச் செவிலியர் பணிக்குச் சென்ற பாலக்காட்டைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கு.
2015ஆம் ஆண்டு அவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு கிளினிக் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கொலைநடந்து ஒருமாதம் கழித்து சவூதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார். மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தைப் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார். தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
ஷரியா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில் நிமிஷா குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடு 2023ல் நிராகரிக்கப்பட்டது. மேலும் 2025ம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் நிர்வாகத்துடன் இந்தியாவுக்கு அரசு ரீதியிலான உறவுகள் இல்லை என்பதால், இந்த வழக்கில் இந்தியாவால் நேரடியாகத் தலையிட முடியவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இரத்தப்பணம் எனப்படும் இழப்பீட்டு தொகையை ஏற்றுக்கொள்வது மட்டுமே நிமிஷாவை காப்பாற்ற இருக்கும் ஒரே வழி.
கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருவால் மட்டுமே மஹ்தி குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. ஏமனின் புகழ் பெற்ற அறிஞரும் சூஃபி ஹபீஸின் மத்தியஸ்தம் மூலம்,இரத்த பணம் குறித்துப் பேச முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது, மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த அதிக நேரத்தை வழங்கியுள்ளது.