புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிராம்பட்டினத்தை சேர்ந்த கணேசன் எஸ்.ஆர்.பட்டணத்தில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக வந்துவிட்டு சொந்த ஊர் செல்ல மீமிசல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது சென்னை செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி அதிராம்பட்டினத்தில் நிற்குமா என்று கேட்டதால் பேருந்து ஓட்டுனருக்கும் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரிக்க சென்றபோது போலீஸ் என்று தெரியாமல் கணேசன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த போலீசார் சரமாரியாக தாக்கி விசாரணைக்காக கணேசனை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது மீண்டும் கணேசன் வாக்குவாதம் செய்ததால் போலீசார் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் கணேசன் மயக்கமடைந்ததால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் தாக்கியதில் கணேசனுக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே அரசு பேருந்து கண்ணாடியை கணேசன் உடைத்து சேதப்படுத்தியதாக ஓட்டுநரும், நடத்துனரும் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கணேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கணேசன் சிகிச்சை பெற்று வருவதால் அவரை அங்கேயே காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் மூன்று காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.