அனபெல் திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை பற்றி வதந்திகளும் கட்டுக்கதைகளும் தற்போதும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த சூழலில் அனபெல் பொம்மையுடன் சுற்றிய நியூ இங்கிலாந்து மனநல ஆராய்ச்சி சமூகத்தின் தலைமை விசாரணை அதிகாரி டான் ரிவேராவின் திடீர் மரணம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
ஹாலிவுட்டில் CONJURING, THE NUNE, ANNEBELLE போன்ற திகிலூட்டும் திரைப்படங்களைத் தனியாக அமர்ந்து பார்த்தால் அவ்வளவுதான். நெஞ்சுவலியே வந்துவிடும்.. இதில் அனபெல் திகில் படம் உலகம் முழுவதும் பிரபலமானது. அமானுஷ்ய சக்திகள் நிறைந்த Annabelle பொம்மை சுற்றி நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களின் கலவையே இப்படத்தின் கதை.
சர்வதேச அளவில் குக்கிராமங்கள் வரையிலும் பிரபலமான இந்த பொம்மை, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பொம்மை திடீரென மாயமாகிவிட்டதாக இணையதளத்தில் வெளியான தகவலும், கட்டுக்கதைகளும் காட்டுத்தீ போல் பரவியது.
வழக்கமாக வாரன்ஸ் அக்கல்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனபெல் பொம்மை, கடந்த மே மாதம் ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அப்போது லூசியானாவில் அனபெல் பொம்மை காணாமல் போனதாக வதந்தி பரவியது.
இதை மறுத்த நியூ இங்கிலாந்து மனநல ஆராய்ச்சி சமூகத்தின் தலைமை விசாரணை அதிகாரி டான் ரிவேரா, இணையத்தில் வெளியான தகவல் அனைத்துமே வதந்தி என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். அத்துடன் மரப்பெட்டிக்குள் அனபெல் பொம்மை பத்திரமாக இருப்பதாக டிக்-டாக் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
2025 அக்டோபரில் இல்லினாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அனபெல் பொம்மை பங்கேற்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அனபெல் பொம்மையுடன் சுற்றித்திரிந்த டான் ரிவேரா, கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க்கில் உள்ள அவரது ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மரணத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அது உறுதி செய்யப்படும் என்றும், அவர் இறந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை என்றும் விசாரணை அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில் டான் ரிவேரா மரணத்திற்கு அனபெல் பொம்மைதான் காரணமா என்ற சந்தேகத்தை இணையவாசிகள் எழுப்பி வருகின்றனர்.