திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் காவல்துறையில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்துக்கள் உயரதிகாரிகளின் முகத்திரையைக் கிழித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
காவல்துறை நிர்வாகத்திலேயே இவ்வளவு குளறுபடிகள் இருக்கும் போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தலைகீழாகத்தான் இருக்கும் என விமர்சித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், நல்ல நேர்மையான அதிகாரிகளைச் சுதந்திரமாக பணியாற்ற விடாமல் ரவுடிகளைப் போல் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
மேலும், காவல்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்வதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.