அக்னி-1, பிருத்வி-2, ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்த இந்தியா, எல்லையில் குடைச்சல் கொடுத்துவரும் பாகிஸ்தான், சீனாவுக்குப் பலமான செய்தியை அனுப்பியுள்ளது. அது என்ன செய்தி விரிவாகப் பார்க்கலாம்….
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புற்றீசல் போன்று பாகிஸ்தான் அனுப்பிய துருக்கியின் ட்ரோன்களையும், சீனாவின் ஜெட் விமானத்தையும் துல்லியமாகத் தாக்கி அழித்தது இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ்.
லடாக் எல்லையில் ஓயாமல் குடைச்சல் கொடுத்து வரும் சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்தது இந்தியா.
சவாலான தட்ப வெப்ப நிலைகளிலும் தங்கு, தடையின்றி எதிரி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் லடாக்கில் 15 ஆயிரம் அடி உயரத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, மிக வேகமாக நகரும் இரு இலக்குகளை, ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாகத் தாக்கி அழித்ததாக DRDO தெரிவித்துள்ளது.
4,500 மீட்டர் உயரத்தில் கூட நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு 25 முதல் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வரும் போர் விமானங்கள், டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள், க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இதேபோன்று ஒடிசா கடற்பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவுப்பகுதியில் அணு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு, குறுகிய தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் பிருத்வி-2 மற்றும் அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் பிருத்வி-2 ரக ஏவுகணை 500 கிலோ வெடிகுண்டுகள் அல்லது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 700 முதல் 900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-1 ரக ஏவுகணை ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடியது என்று ராணுவம் கூறியுள்ளது.
உள்நாட்டில் தயாரித்து வரும் ஏவுகணைகளும், வான் பாதுகாப்பு அமைப்புகளும், மிகுந்த நம்பகத் தன்மை கொண்டது என்பதால், எல்லையில் அத்துமீறும் சீனா, பாகிஸ்தானுக்கு ஏவுகணை சோதனைகள் மூலம் இந்தியா எச்சரிக்கை மணி அடித்துள்ளது.