திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் பள்ளிச் சிறுமி கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை நெருங்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. புகார் அளித்து நாட்கள் பல கடந்தும், சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளியைக் கைது செய்யமுடியாத காவல்துறை பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.
திருவள்ளூர் அருகே பள்ளி சென்று திரும்பிய பத்து வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் தூக்கிச் செல்லும் காட்சிகள் தான் இவை. இதோ இந்த சாலை தான் பள்ளிக்குச் சென்று பாடங்களைக் கற்க வேண்டிய சிறுமியை மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையை உருவாக்கிய சாலை.
பட்டப்பகலில் தனியாக நடந்து கொண்டிருந்த பள்ளிச்சிறுமியை வாயைப் பொத்தி தூக்கிச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கயவனிடமிருந்து தப்பிவந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையில் புகார் அளித்து நாட்கள் பல கடந்தும் குற்றவாளியைக் கண்டறிய முடியாமல் திணறி வருவது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருகில் இருந்த கடையில் தேநீர் அருந்திக் கொண்டு அந்த சாலையில் செல்லக்கூடிய பெண்களை உற்றுப் பார்ப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்த அந்த கயவன், ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து சிறுமியை பின் தொடர்ந்து சென்று வாயைப் பொத்தி மாந்தோப்பிற்குள் தூக்கிச் சென்று இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளான்.
திரைப்படங்களில் வரும் மரங்கள் நிறைந்த திகில் காட்சிகளைப் போலக் காட்சியளிக்கும் இந்த மாந்தோப்பில் தான் இந்த ஈவு, இரக்கமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளிச்சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கயவனின் முகமும் உருவமும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இருந்தும் காவல்துறையினர் குற்றவாளியைக் கைது செய்ய முடியவில்லை என்பது அதன் செயலற்ற தன்மையையே வெளிப்படுத்துவதாக அப்பகுதி பெண்கள் கொந்தளிக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, டிடிவி தினகரன் என பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக அரசும் அதன் முதலமைச்சரும் மவுனம் காப்பது ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
சிறுமிகள் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனையைக் கடுமையாக்கிய பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருந்தப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில் தமிழக அரசு காட்டும் அலட்சியமே அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறக் காரணம் என்ற புகாரும் எழுந்திருக்கிறது. சிறுமியைச் சீரழித்த கயவனை உடனடியாக கண்டறிந்து அவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.