சேலம் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்திற்கு பாஜக எப்போது துணை நிற்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றிய சேலம் ஆடிட்டர் ரமேஷ் 12 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவரது 12ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தியும், ரத்த தான முகாம் நடத்தியும் ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினத்தை பாஜகவினர் அனுசரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது திரு உருவ படத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இவரை தொடர்ந்து பாஜகவினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர், இந்து முன்னணியினர், பொதுமக்கள் என பலரும் ஆடிட்டர் ரமேஷின் திரு உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது பேசிய நயினார் நாகேந்திரன் கட்சியில் அற்புதமாக பணியாற்றிய ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரின் மனதிலும் நீங்காத துயரமாக உள்ளது எனவும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு பாஜக எப்போதும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.