கோவையில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கிளை ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழை, எளிய பொருளாதாரத்தின் பின் தங்கிய மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி வந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவது குறித்தும், அதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம்.
1984ம் ஆண்டு கொடைக்கானலில் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது தான் இந்த அன்னை தெரசா பல்கலைக்கழகம்.
அன்னை தெரசாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தைக் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் அதிகம் பயிலும் இந்த ஆராய்ச்சி மையத்தை மூட முடிவு செய்திருப்பது கல்வியாளர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விரிவாக்க மையத்தை மூடுவதன் மூலம் வருடத்திற்கு 2500 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரையிலான கட்டணத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்று வந்த மாணவிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் கல்வி உதவித் தொகையின் கீழ் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கு உயர்கல்வியை வழங்கி வந்த இந்த ஆராய்ச்சி மையம் மூடப்படுவதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் போதிய இடம் ஒதுக்காமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
ஆராய்ச்சி மையம் மூடப்படுவதைத் தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகமோ, இந்த தகவல் வெளியே கசிந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவது கல்வியாளர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.