மதுரை வாடிப்பட்டியில் இடப்பிரச்சினை காரணமாக ஓய்வுபெற்ற டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை உயரதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ததாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
வாடிப்பட்டி அருகேயுள்ள தனிச்சியம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பவருக்கு, மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், 30 சென்ட் நிலம் உள்ளது.
தவமணி நிலத்தின் பின்பகுதியில் மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறைத்துறை டிஐஜி துரைசாமி என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இருவருக்கும் இடையே நிலத்திற்கான பாதை பிரச்சனை இருந்து வந்த நிலையில், நிலத்தைச் சுத்தம் செய்து விவசாயப் பணியை மேற்கொண்ட தவமணி மீது, டிஎஸ்பி ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனைக் கண்டித்து மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வுபெற்ற டிஐஜி துரைசாமி கடந்த 2 ஆண்டுகளாகத் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் தவமணியின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மேலும், முன்னாள் டிஐஜி துரைசாமி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் டிஎஸ்பி ஆனந்தராஜ் ஆகியோர் மீது காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.