ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வந்து சேர்வதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களின் வழியாக முதல் போகப் பாசனத்திற்கான தண்ணீர் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.
சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட கானபள்ளி, பூதி நத்தம், பெத்தமுத்தாலி, அட்டூர், மாரசத்திரம் உள்ளிட்ட 22 கிராமங்கள் இதன்மூலம் பயனடையும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. கடைமடை கிராமங்களுக்குத் தண்ணீர் வந்து சேர்வது என்பது காணல் நீராகவே மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வரும் கடைமடைப்பகுதிகளைச் சென்றடையாத நிலையில், அந்த தண்ணீரையே நம்பியிருக்கும் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. புதர் மண்டியிருக்கும் கால்வாய்கள் உரிய நேரத்தில் தூர்வாரப்படாததே கடைமடைக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கெலவரப்பள்ளியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடைக்கு வந்து சேர்வதில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், பலகட்ட போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றனர்.
கடைமடைக்கும் தண்ணீர் செல்லும் வகையில் கால்வாயைத் தூர்வாரி அகலப்படுத்தும் பணிக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியும் விவசாயிகள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.
எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே கால்வாய்கள் அனைத்தும் முறையாகத் தூர்வாரப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.