நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர், முன்னாள் தலைமை செயலாளர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.
பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு, கால நிர்ணயம் செய்வது மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை ஏற்று விளக்கமளிக்க முன்னாள் மற்றும் தற்போதைய தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராகினர்.
அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம் தரப்பில், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க கால நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு ஜூன் 16-ம் தேதி கூடி வேலை கோருவோரின் பட்டியலை மாநில அளவில் பராமரிப்பது என முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் மற்றும் தற்போதைய தலைமை செயலாளர் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உரிய விளக்கம் அளித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார். மேலும், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக அரசு பணியாளர் விதிகளில் இரண்டு வாரங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, திருத்தம் செய்யப்பட்ட நகலை 3 வாரங்களில் உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பார்வைக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டார்.