ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்லவன் இல்லம் அருகே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு பொதுச்செயலாளர் தயானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயானந்தம், போக்குவரத்துக் கழகத்தில் பணியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கையை இணைத்து தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகத் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பஞ்சப்படி பிரச்சனையைத் தீர்ப்போம் என்று திமுக அரசு கூறியது என்றும், இதுவரை திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், வேலைநிறுத்த போராட்டம் குறித்து சிஐடியு மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என தயானந்தம் தெரிவித்தார்.
இதேபோன்று, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சிஐடியு திருச்சி – கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் கருணாநிதி, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் மாற்றி வாக்களிப்போம் எனத் தெரிவித்தார்.