த்ரிஷ்யம் படப் பாணியில் நடந்த கொலை மும்பையை அலறவிட்டுள்ளது. வீட்டில் கணவனைக் கொன்று புதைத்துவிட்டு மாயமான மனைவி சிக்கியது எப்படி?… பகீர் கிளப்பும் பின்னணியுடன் பார்க்கலாம்… விரிவாக.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம்தான் ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே த்ரிஷ்யம் படத்தின் கதை.
இத்திரைப்படம், தமிழ், இந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
இதுபோன்ற சம்பவம்தான் மும்பையை அலறவிட்டிருக்கிறது. ஆனால் கதைதான் வேறு. மும்பையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நாலாசோபாரா பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான விஜய் சவான். 15 நாட்களாக அவரை காணவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. விஜய் சவானின் வீட்டிற்குச் சென்ற அவரது சகோதரர்கள் அண்ணனைப் பற்றி விசாரிக்க, விஜய் வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார் மனைவி கோமல் சவான்.
விஜய் பற்றிய துப்பு கிடைக்காத நிலையில், சில நாட்கள் கழித்து சவான் வீட்டிற்குச் சென்ற சகோதரர்களுக்கு, வீடு பூட்டப்பட்டிருப்பதும், கோமல் சவானின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், அறை ஓரத்தில் சம்பந்தமே இல்லாமல் புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்த பகுதியை தோண்டத் தொடங்கினர். துர்நாற்றம் வீச, விஜயின் ஆடையை முதலில் வெளியே வந்தது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் 4 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு, சிதைந்த நிலையிலிருந்த விஜய்யின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
அண்மையில் விஜய் மனைவி கோமல் சவான், வீட்டிற்குக் கூலித்தொழிலாளரை அழைத்து வந்து, 4 அடி ஆழக் குழி தோண்டியதும், மற்றொரு நாளில் வேறொரு தொழிலாளியை வைத்து அதே இடத்தில் டைல்ஸ் பதித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதிய வீடு வாங்கத் திட்டமிட்டிருந்த விஜயின் வங்கிக்கணக்கில் இருந்து, லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.
20 வயது கல்லூரி மாணவர் மோனு என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கோமல் சவான், தனது 8 வயது மகனுடன் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்கள் பிடிபட்டால்தான் கொலை எப்படி நடந்தது என்பது தெரியவரும் என்பதால் போலீஸ் விசாரணை நீண்டுள்ளது.