இந்தியாவின் போர்க்குதிரை என்று அழைக்கப்படும் மிக்-21 ரக போர் விமானங்கள் விமானப்படையில் இருந்து விரைவில் விடைபெற உள்ளன. 60 ஆண்டு சகாப்தம் முடிவுக்கு வரும் நிலையில், மிக்-21 ரக போர்விமானங்கள் பற்றி அலசலாம் விரிவாக..
இந்தியாவின் முதல் சூப்பர்சோனிக் பைட்டர்ஜெட் என்றால் அது மிக்-21 ரக போர்விமானங்கள் தான்…. 1960 மற்றும் 70 காலகட்டங்களில் இந்திய வான்படையை பலப்படுத்திய இவ்வகை போர் விமானங்கள் தற்போது ஓய்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
ரஷ்ய தயாரிப்பான மிக்-21 ரக போர் விமானங்கள் 1963ம் ஆண்டு இந்திய விமானப்படையில் கைகோர்த்தவை… முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் பக்க பலமாக இருந்த இவ்வகை விமானங்கள், அதன் செயல்பாடுகளால் இந்தியாவின் முதுகெலும்பாகவே வர்ணிக்கப்பட்டன..
சோவியத் ரஷ்யா- இந்தியா கூட்டு சேர்ந்து 1955ம் ஆண்டு முதல் மொத்தம் 11 ஆயிரத்து 496 மிக்-21 ரக போர் விமானங்களைத் தயாரித்தன. இதில், 840 விமானங்கள் இந்தியா தரப்பிலும், 10 ஆயிரத்து 645 மிக்-1 விமானங்களைச் சோவியத் ரஷ்யா தரப்பிலும் கட்டமைக்கப்பட்டன. குறிப்பாக 600 மிக்-21 ரக போர் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கட்டமைத்திருந்தது.
நான்கு கண்டங்களில் சுமார் 60 நாடுகள் மிக்-21 விமானங்களை பயன்படுத்தி வந்த நிலையில், 1986ம் ஆண்டு கடைசியாக அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. 1965 மற்றும் 1971ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போர் முதல் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போர் வரை மிக்-21 ரக போர் விமானங்கள் இந்திய வான் பாதுகாப்பின் அரணாகத் திகழ்ந்தவை.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலின்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்த மிக்-21 ரக போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பயன்படுத்திய இவ்வகை விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது.
புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டிருந்தாலும், அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையான நிலையில், அவற்றைச் சேவையிலிருந்து அகற்ற முடிவெடுக்கப்பட்டது. எனினும், Tejas Mk1A ரக போர் விமானங்களின் உற்பத்தி தாமதமானதால், அதன் பயன்பாடு சிறிது காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
கடைசியாக 2023ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற விமானப் படை நாள் அணிவகுப்பில் மிக்-21 விமானங்கள் பங்கேற்றன. மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் பதில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இலகுவகை போர் விமானமான தேஜஸ் மார்க்-1ஏ சேவையில் இணைக்கப்படவுள்ளது.
இதற்காகச் செப்டம்பர் 19 அன்று சண்டிகர் விமானப்படை தளத்தில் இந்த போர்க்குத்திரைக்குப் பிரமாண்டமான பிரியாவிடை விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.