பாகிஸ்தானில் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை பதவி நீக்கம் செய்துவிட்டு, அசிம் முனீர் அதிபர் பதவியைக் கைப்பற்றுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசிம் முனீர் பாகிஸ்தானின் அதிபரானால் பிரதமர் ஷெரீப்பின் நிலை மற்றும் பாகிஸ்தானின் நிலைமை என்னவாகும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இன்றைய சுழலில், பாகிஸ்தானில் அதிகபட்ச அதிகாரம் மிக்க மனிதர் யார் எனக் கேட்டால், ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர்தான். சாதாரண இஸ்லாமிய மதபோதகரின் மகனாகப் பிறந்த அசிம் முனீர், ஒரு சராசரி வீரராகப் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி, உளவுத் துறைத் தலைவர், ராணுவ புலனாய்வு தலைவர் என வளர்ந்து, பாகிஸ்தானின் இராணுவத் தலைவரானார்.
பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்கு முன்னதாக, வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மாநாட்டில் பேசிய அசிம் முனீர், இரு நாடுகள் கோட்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு நாடுகள் என்றும், பாகிஸ்தானியர்கள் இந்துக்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டவர்கள் என்றும் கூறினார்.
ஒவ்வொரு பாகிஸ்தான் குடிமகனும், பாகிஸ்தான் எவ்வாறு பிறந்தது என்ற வரலாற்றைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றும், வலியுறுத்தினார். கூடுதலாக, காஷ்மீரை பாகிஸ்தானின் “கழுத்து நரம்பு” என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து,பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதற்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. அசிம் முனிரின் தலைமையில் பாகிஸ்தானின் இராணுவம் இந்தியாவால் அவமானகரமாகத் தோற்கடிக்கப் பட்டது. அப்போதே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பிரதமர் ஷெரீப்பை குறிப்பிடாமல் அசிம் முனீர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காகவும், எதிரிகளைத் தோற்கடித்ததற்காகவும் ஃபீல்ட் மார்ஷலாக பதவி ஏற்கிறார் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை அறிவிக்க வைத்து, தன்னை தானே ஃபீல்ட் மார்ஷலாக உயர்த்திக் கொண்டார் அசிம் முனீர்.
ஃபீல்ட் மார்ஷலாக அசிம் முனீரின் பதவி உயர்வு, அரசின் மீதான அவரின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியது. பாகிஸ்தானின் “சிறந்த மீட்பர்” என்ற பிம்பத்தைத் தமக்கு ஏற்படுத்திக் கொண்ட அசிம் முனீர், தன்னை இரண்டாம் முஷாரஃப் ஆக நிலை நிறுத்திக் கொண்டார்.
இதற்கெல்லாம் முன்னதாக, தனது இராணுவத் தலைவர் பதவிக்காலத்தை மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கும் வகையில் விதிகளை மாற்றிக் கொண்டார். தொடர்ந்து, பொதுமக்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளித்ததன் மூலம் தனது அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொண்டார்.
இதற்கிடையே, அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து, மதிய விருந்து கொடுத்து உபசரித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தச் சந்திப்பு, அசிம் முனீரின் செல்வாக்கை வெளிக்காட்டியது. சுவாரஸ்யமாக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இன்னும் ட்ரம்பைச் சந்திக்கவில்லை.
பிரதமரின் அனுமதி இல்லாமலேயே இலங்கை மற்றும் இந்தோனேசியா சுற்றுப்பயணங்களை அசிம் முனீர் மேற்கொள்ள இருக்கும் நிலையில், நாட்டின் அதிபர் அதிகாரத்தையும் அசிம் முனீர் கைப்பற்றி விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப் ஒரே நேரத்தில் இராணுவத் தலைவராகவும், அரசின் தலைவராகவும் செயல்பட்டது போலவே அசிம் முனீரும் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இராணுவப் புரட்சி மூலம் 1999ம் ஆண்டு பர்வேஸ் முஷாரஃப் நாட்டின் அதிபராக, ஒன்பது ஆண்டுக்காலம் ஆட்சியிலிருந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் பதவிக்கு வந்த நான்கு பிரதமர்களும் பலவீனமானவர்களாகவே இருந்தனர்.
வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அரசின் அனைத்து முடிவுகளும் ராணுவத் தலைமையகத்திலிருந்து நேரடியாக வந்தன. நாடாளுமன்றம் ஒரு ரப்பர்-ஸ்டாம்ப் நிறுவனமாகச் செயல்பட்டது. வற்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் மூலம், நீதித் துறை வழிநடத்தப்பட்டது.
அதுபோல அசிம் முனீர், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதை முஷாரஃப் 2.0 என்று சொல்லப்படுகிறது. அமைச்சகங்களுக்கு நேரடி உத்தரவுகளை அசிம் முனீர் வழங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆட்சிக்கவிழ்ப்பு ஏதும் நடக்காமல்,மென்மையான முறையில், அதிபர் சர்தாரியை தன் வழியிலிருந்து விலக வைத்து விடுவார் என்றும், அசிம் முனீர் அதிபர் பதவிக்கு வருவது காலத்தின் கட்டாயமாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அமெரிக்கா, சீனா மற்றும் வளைகுடா நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் ஒரு நிலையான அரசைத் தரும் அசிம் முனீரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தயங்காது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ISI யின் முன்னாள் தலைவராக இருந்த அசிம் முனீர்,பாகிஸ்தானின் அதிபராவது , இந்தியாவுக்கு நெருக்கடிகளையும் சவால்களையும் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு அதிக அதிகாரத்தை அளிப்பார் என்றும், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்குத் தீவிரமாக உதவுவார் என்றும் கூறப்படுகிறது.
இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பில்லாத சூழலை அசிம் முனீர் உருவாக்குவார் என்றும், சீனாவுடனான ஆதரவில், எல்லைப்பகுதிகளில் தாக்குதல்களை அதிகரிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அசிம் முனீர் தலைமையில்,ஆப்கானிஸ்தான்,வங்கதேசம் இலங்கை,இந்தோனேசியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஆதிக்கம் செலுத்த முற்படும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஒரு போரில் தோற்று, பின்னர் ஒரு பெரிய கிரீடத்தைப் பெறுவது பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும். அசிம் முனீர் அதிபராகாமல் போகலாம். ஆனாலும், திரைக்குப் பின்னால் இருந்து பாகிஸ்தானில் அசிம் முனீரே ஆதிக்கம் செலுத்துவார் என்று நம்பப்படுகிறது.