ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் அணுசக்தி மையமான கிரானா மலைகளைக் குறிவைத்து இந்தியா தாக்கியதா? இந்தக் கேள்விக்கு இந்தியாவின் பதில்- தாக்கவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள செயற்கைக் கோள் படங்கள் கிரானா மலைகள் தாக்கப் பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன. அது பற்றிய ஊரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சர்கோடா மாவட்டத்தில் உள்ளது கிரானா மலை. இந்த மலையின் குகைகளில்தான் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. நிலத்தடி அணுசக்தி உள்கட்டமைப்புக்குப் பெயர் பெற்ற இந்தப் பகுதி, பாகிஸ்தானின் வலுவூட்டப்பட்ட ராணுவ மண்டலம் எனவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 68 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 39 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரானா மலை, பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரானா மலைகள், சர்கோதா விமான தளத்திலிருந்து சாலை வழியாக வெறும் 20 கிலோமீட்டர் தொலைவிலும், குஷாப் அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
கிரானா மலைகளின் பழைய செயற்கைக்கோள் வரைபடத்தைப் பார்த்தால், மலைகளின் பழுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்திய இராணுவம் இந்த மலை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரவலாக வைரலானது.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான பதிலடியோடு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது காலித் ஜமாலி மிரட்டல் விடுத்திருந்தார்.
மேலும், சிந்து நதியில் இந்தியா தண்ணீரை நிறுத்தினால், இந்தியா போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் காட்சிக்காக மட்டும் வைத்திருக்கவில்லை என்றும், பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி தெரிவித்திருந்தார்.
அதே சமயம், அணு ஆயுத விஷயத்தில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், நேரடி அச்சுறுத்தல் வந்தால்,இந்தியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியிருந்தார்.
அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியா பின்பற்றினாலும், பாகிஸ்தானிடம் அத்தகைய கட்டுப்பாட்டுக் கொள்கை இல்லை. இதன் பிறகுதான் ரஃபிகி, முரித், நூர் கான், ரஹிம் யார் கான், சுக்கூர், சுனியன், பஸ்ரூர், சியால்கோட் உள்ளிட்ட பாகிஸ்தானின் முக்கியமான விமானத் தளங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.
சர்கோதாவில் உள்ள முஷாஃப் விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையில் ஒரு தாக்குதல் நடந்ததாகச் செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டின. இந்த தளம் கிரானா மலைகளுக்கு அடியில் உள்ள நிலத்தடி அணுசக்தி சேமிப்பு தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, கிரானா மலைக்கு அருகில் இருக்கும் நூர் கான், சர்கோதா விமான தளங்களின் மீதான தாக்குதல், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்யும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தியது. கிரானா மலைகள் தாக்கப்பட்டதாக வெளியான தகவலை, இந்திய விமானப் படையின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி நிராகரித்தார்.
இந்தச் சூழலில், செயற்கைக்கோள் படங்களை DECODE செய்வதிலும், வானத்திலிருந்து போர் மண்டலங்களைக் கண்காணிப்பதிலும் பல ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் புவி-புலனாய்வு ஆராய்ச்சியாளரான டேமியன் சைமன் கிரானா மலை தாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது எக்ஸ் தளத்தில், கடந்த ஜூன் மாதம் கூகிள் எர்த் மூலம் எடுக்கப்பட்ட கிரானா மலைகளின் படங்களைப் பகிர்ந்துள்ளார். கிரானா மலைப் பகுதிக்குள் இந்தியா நடத்திய தாக்குதலின் தாக்கத்தை இந்தப்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன என்றும் டேமியன் சைமன் கூறியுள்ளார்.
அதாவது, கிரானா மலைகளில் இந்தியாவின் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தையும் இந்தியாவின் தாக்குதல்களுக்குப் பிறகு சர்கோதா விமானப்படைத் தளத்தில் ஓடுபாதைகள் பழுதுபார்க்கப்பட்டதையும் டேமியன் சைமன் படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
கிரானா மலையின் சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகள் வெடித்தது என சைமன் கூறாத நிலையில், பெரிய பாதிப்பு இல்லாத அளவுக்கு ஒரு தாக்குதல் அடையாளம் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். கிரானா மலையில் இருந்து வரும் புகை ஒரு செய்தியைச் சொல்கிறது என்றும், அது இந்தியாவின் ஏவுகணை அடித்த லேசான அடி என்றும் தெரிவித்துள்ளார்.
இதில், சைமனின் நம்பகத்தன்மை மிகவும் முக்கியமானதாகும். போலி படங்கள் மற்றும் தவறான தகவல்களை அம்பலப்படுத்துவதில் பெயர் பெற்ற சைமனை எளிதில் நிராகரிக்க முடியாது என்று கூறுகிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு பரப்பிய போலி காட்சிகளை சைமன் தான் ஆதாரத்துடன் நிராகரித்தார்.
மேலும், LANDSAT, KawaSpace மற்றும் MazarVision போன்ற நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி ஆப்ரேசன் சிந்தூரின் துல்லியமான தாக்குதலைத் துல்லியமாகத் தனது படங்களால் நிரூபித்தார். கிரானா மலைகள் தாக்கப்படவில்லை என்று இந்தியா கூறினாலும், சைமனின் சான்றுகள் வேறொரு உண்மையை எதிரொலிக்கின்றன.
கிரானா மலையில் இந்தியா ஒரு சிறிய கீறல் போட்டாலும், அந்த துல்லியம், ஆற்றல்; அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று கூறிய பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல… அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தியா கொடுத்த எச்சரிக்கை ஆகும்.