சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் தனது பாஸ்போர்ட் தொலைந்துபோனதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் விண்ணப்பித்ததாகத் தெரிவித்திருந்தார்.
அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணம் காட்டி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகச் சீமான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரிய மனுவைப் பரிசீலித்து 4 வாரங்களில் பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.