தாயை அவமானப்படுத்திய நபரை 10 ஆண்டுகள் தேடிக் கண்டுபிடித்துப் பழிதீர்த்திருக்கிறார் இளைஞர் ஒருவர். சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலும் ரிவென்ஞ் திரைப்படங்களுக்குப் பஞ்சமில்லை. பாலிவுட் திரைப்படங்கள் போன்று 10 வயது சிறுவனின் கோபம், 10 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் கொலையாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவத்தை அரங்கேற்றிய நபரின் பெயர்தான் சோனு காஷ்யப்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், சோனுவின் தாயாரை கடுமையாகத் தாக்கி அவமானப்படுத்திய மனோஜ் அங்கிருந்து தலைமறைவாகியிருக்கிறார். தனது தாய் தன் கண் முன்னால் தாக்கப்பட்ட அவமானத்தை சோனு காஷ்யப்பால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கோபத்தின் உச்சிக்கே சென்ற சோனு, மனோஜை பல ஆண்டுகளாகச் சல்லடை போட்டுத் தேடி வந்திருக்கிறார். 10 ஆண்டுகள் உருண்டோட, கடைசியாக 3 மாதத்திற்கு முன்பு முன்ஷி புலியா பகுதியில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த மனோஜை கண்டுபிடித்தார் சோனு.
கோபம் கொப்பளிக்க, மனோஜைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார். மனோஜைப் பின்தொடர்ந்த சோனு, 4 கூட்டாளிகள் உதவியுடன் கதை முடிக்க முடிவு செய்தார்.
கடந்த மே 22ம் தேதி மனோஜ் வழக்கம்போல் தனது கடையை பூட்டி வீட்டுச் செல்ல, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சோனுவும், அவரது கூட்டாளிகளும் மறைந்திருந்தனர். தனியாக வந்த மனோஜை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கிய அவர்கள், ரத்த வெள்ளத்தில் விட்டுவிட்டு தப்பியோடினர். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி மனோஜ் உயிரிழந்தார்.
கொலை திட்டம் நிறைவேறினால் மது விருந்து வைப்பதாக உறுதியளித்தபடி, நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார் சோனு. இதனிடையே கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். எனினும் கொலையாளிகளை நெருங்க முடியவில்லை.
அண்மையில் சோனுவும், அவனது கூட்டாளியும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் கொலையாளிகளில் ஒருவர் அணிந்திருந்த டீ-சர்ட்டும், சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த நபரின் டீசர்ட்டும் ஒத்துப்போக, 5 பேரையும் பொரி வைத்துப் பிடித்தது போலீஸ்.
10 ஆண்டுக்கால ரிவென்ஞ்ச், கொலையில் நிறுத்திய சம்பவம் ஒருபக்கம் பேசப்பட்டாலும், சில நிமிட சிசிடிவி காட்சிகள் குற்றவாளிகளைக் கண்டறிய பேரூதவி செய்யும் என்பதை சோனுவின் சம்பவம் உறுதிப்படுத்தியிருக்கிறது.