கொரோனோ தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளராக பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு வழங்க வேண்டிய நிதியுதவி தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் நிதியை வழங்க மறுக்கும் தமிழக அரசால் ஆதரவின்றி தவிக்கும் மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கொரோனா தொற்று பரவல் உச்சத்திலிருந்த நிலையிலும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக பணியாற்றி மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கொரானா தொற்றிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பறிகொடுத்தனர்.
அத்தகைய மருத்துவர்களின் ஒருவராக, முன் களப்பணியாளராகத் தன்னை முன்னிறுத்தி தன் உயிரையும் துறந்த மருத்துவர் விவேகானந்தனுக்குத் தமிழக அரசு இதுவரை எந்தவித உதவியையும் செய்யவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் என அறிவித்த தமிழக அரசு, மருத்துவர் விவேகானந்தன் இறந்த பிறகு, அவருக்கான நிதியைக் கூட வழங்காமல் ஏமாற்றி வருவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்திய அரசு அறிவித்தபடி 50 லட்ச ரூபாய் நிதி வழங்கிய நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் மாநில அரசு நிதி உதவி வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வலியுறுத்தி பலமுறை போராடியும் அரசும், சுகாதாரத்துறையும் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை என மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னுயிரை நீத்த மருத்துவர் விவேகானந்தனுக்கு நிதியுதவியோடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு என்பதை அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.