அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 10வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரம் அரசுப்பள்ளிகள் உள்ள நிலையில் அதில் 12 கோடியே 75 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஆண்டுக்கு ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் , 2021 -22ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் 14.32 கோடி மாணவர்கள் அரசுப்பள்ளியில் பயின்றனர் எனவும் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 12.78 கோடியாகக் குறைந்துவிட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக வெளியிடப்பட்ட பட்டியலில் பீகாரில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 மாணவர்கள் அரசுப்பள்ளியில் பயின்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் 10வது இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் 2021-22ம் கல்வி ஆண்டில் 53.14 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளியில் பயின்றதாகவும், ஆனால் 2022-23ம் கல்வி ஆண்டில் 50.42 லட்சமாக எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.