ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்வு செய்யும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அரசியலமைப்பு சட்டப்படி, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியாகும் பட்சத்தில் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பை, இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் சுதந்திர தினத்திற்கு முன்பே குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, ஜம்மு காஷ்மீரின் துணை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதில், மனோஜ் சின்ஹாவின் துணைநிலை ஆளுநர் பதவிக்காலம் ஆகஸ்ட் 6 ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், அவருக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நபர், வெற்றி பெறுவதற்கு 392 வாக்குகளைப் பெற வேண்டும். அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 427 பேர் ஆதரவாக உள்ளதால், அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் சூழல் உள்ளது.