அப்பாச்சி என்ற புதிய ரக ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் தற்போது வாங்கியுள்ளது. அவற்றின் சிறப்பம்சங்கள் என்ன, அவை எவ்வாறு ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் மிகவும் மேம்பட்ட, அதிநவீன வசதிகளைக் கொண்ட பல ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது, AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அதிகளவில் இந்த ரக ஹெலிகாப்டர்களைதான் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஹெலிகாப்டர்களை வாங்கி, இந்திய ராணுவத்தை மேலும் வலிமைப்படுத்த முடிவெடுத்த மத்திய அரசு, போயிங் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
முதல்கட்டமாக தற்போது 3 ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு அப்பாச்சி ரக ஹெலிகாப்டரின் விலை 860 கோடி ரூபாய் முதல் 948 கோடி ரூபாய் வரை உள்ளது. 6 ஹெலிகாப்டர்களுக்கும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 168 கோடி ரூபாய். அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஏன் இத்தனை விலை உயர்ந்தவையாக உள்ளன? ஒரு ராணுவத்திடம் அவை இருப்பது ஏன் மதிப்புமிக்க தாக கருதப்படுகிறது? அப்படி என்னதான் விஷேசமாக அந்த ஹெலிகாப்டரில் உள்ளது எனக் கேள்வி எழலாம்.
AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் எத்தனை விலை உயர்ந்தவையாக உள்ளனவோ, அந்தளவு மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ள லாங்போ ரேடார்கள் அதிநவீனமானவை. மலைகளுக்குப் பின்னாலோ, அடர்ந்த வனப்பகுதிகளுக்குப் பின்னாலோ எதிரிகள் மறைந்திருந்தாலும், இந்த ரேடாரின் தாக்குதலில் இருந்து அவர்களால் தப்பிக்க முடியாது.
அதேபோல, Manned-Unmanned Teaming என்ற அம்சமும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஆளில்லா முறையிலும் இந்த ஹெலிகாப்டர்களை இயக்க முடியும். இவை எதிரிகளின் ரேடார்களை செயலிழக்கச் செய்யும் வகையிலும், cockpit எனப்படும் பைலட்டின் இருக்கை பகுதியில் இருந்தே நேரடியாக எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கடுங்குளிர், உக்கிரமான வெயில், கொட்டி தீர்க்கும் மழை என சீதோஷணமும் இந்த ஹெலிகாப்டரையும் ஒன்றும் செய்ய முடியாது. இரவு நேரத்தில் கூட இந்த ஹெலிகாப்டர்களால், எதிரிகளின் கூடாரங்களைத் துவம்சம் செய்ய முடியும். மற்ற ஹெலிகாப்டர்களை காட்டிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்களை பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவற்றைத் தாக்கி அழித்து, இவற்றில் பயணிக்கும் வீரர்களை கொல்வது என்பது சிம்மசொப்பனமான விஷயம்.
ஏனெனில், அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில் பயணிப்பவர்களைப் பாதுகாக்க, பிரத்யேக கவச அமைப்புகள், உறுதியான வெளிப்புற அமைப்பு ஆகியவை உள்ளன. ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வது, தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல், எதிரிகள் மிக தொலைவில் இருந்தாலும் அவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கவும் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களால் முடியும். அதற்கான பிரத்யேக சென்சார் அமைப்புகளை அவை கொண்டுள்ளன.
இந்த ஹெலிகாப்டரால், தன்னை சுற்றிலுள்ள ரேடார், மற்ற ராணுவ வாகனங்கள், வான் பாதுகாப்பு கவச அமைப்புகளுடன் தொடர்பு கொள்ள முடியும். இதனால், ஒன்றிணைந்த தாக்குதலை நிகழ்த்துவது அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களுக்கு மிகவும் சுலபம்.
இத்தனை மேம்பட்ட அம்சங்கள் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களைதான் இந்திய ராணுவம் தற்போது வாங்கியுள்ளது. இனி இந்தியாவைத் தொல்லை செய்ய வேண்டும் என எதிரி நாடுகள் நினைத்தால், ஒருமுறைக்கு இருமுறை தனது எண்ணத்தை அவை மறுபரிசீலனை செய்துகொள்வது நல்லது.