ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசையை ஒட்டி ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
மதுரை வைகை ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசையையொட்டி சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் குவிந்த மக்கள், சிறப்பு பூஜைகளை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மக்கள் வருகையையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆடி அமாவாசையையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தார். நிகழ்வில் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.