தேர்தல் வரவிருக்கும் நிலையை உணர்ந்து அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுக்கவுள்ளதாக விளம்பரப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது திமுக அரசு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுப்போம் எனப் போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து, பலமுறை, நாம் இந்த திட்டம் செயல்படுத்தப்படமால் இருப்பதை சுட்டிக்காட்டிய பின்பு, கடந்த 2023 செப்டம்பர் மாதம் தான் அதைச் செயல்படுத்தியது.
அதிலும், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றியது திமுக. இதனால், தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அப்படியிருக்க, தேர்தல் வரவிருக்கும் நிலையை உணர்ந்து அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுக்கவுள்ளதாக விளம்பரப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது திமுக அரசு.
முன்பு தகுதி இல்லை எனக் கூறி நிராகரித்த நிலையில், இப்போது மட்டும் எப்படி தகுதி வந்தது என நமது சகோதரிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அப்படிக் கொடுக்க திமுக அரசு முடிவு செய்தாலும் தமிழக பெண்கள் உங்கள் மீது கொண்டிருக்கும் அதிருப்தி குறையப் போவதுமில்லை, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை.
அப்படி உண்மையில் திமுக மனம் திருந்தி பெண்களுக்கு உதவித்தொகை வழங்க விரும்பினால், நீங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விடுபட்ட 50 மாத நிலுவை தொகையான 50,000 ரூபாயை முதலில் வழங்க வேண்டும். அதுதான், திமுக அரசால் ஏமாற்றப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் நியாயமாக அமையும் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.