அகமதாபாத் விமான விபத்தில் இருந்தே பலர் மீளாத நிலையில், ரஷ்யா விமானம் விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருப்பவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை என்ற தகவல் உறவினர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது.
சுக்குநூறாக சிதறிக் கிடக்கும் விமான பாகங்கள்… கருகிப்போன உடல்கள் என உலகையே மீண்டும் கண்ணீர் கடலில் தள்ளியிருக்கிறது ரஷ்ய விமான விபத்து. அகமதாபாத்தில் நடந்த கோர விமான விபத்தில் இருந்தே உலகம் மீளாத நிலையில், மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஷ்ய-சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டிண்டா நகரத்திற்குச் சென்ற அங்காரா AN-24 விமானம்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள், 6 பணியாளர்கள் என 50 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் சென்றபோது ரேடாரில் இருந்து திடீரென மாயமானது.
மீட்பு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், டிண்டா நகரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, அடர்ந்த மலைப்பகுதியில் புகை மூட்டம் எழுவதைக் கண்டது மீட்புக்குழு.
விமானம் எரிந்த நிலையில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீட்புக்குழு, விமானம் முழுவதும் உருக்குலைந்ததால், பயணிகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்தது. சம்பவ இடத்திற்குக் கூடுதல் மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விமானத்தை இரண்டாவது முறையாகத் தரையிறக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா நிறுவனத்தால் இயக்கப்படும் Antonov-24 என்ற பெயர் கொண்ட இந்த விமானம், 50 ஆண்டுகள் பழமையானது. 50 இருக்கைகள், பவர்புல்லான Twin turboprop engine, 420 கிலோ மீட்டர் வேகம் கொண்ட இந்த விமானம் முதன்முதலில் 1959ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 2021ம் ஆண்டுடன் விமானத்தின் தகுதிச்சான்றிதழ் முடிந்த நிலையில், 2036ம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் பழைய சோவியத் விமானங்களை அப்புறப்படுத்திவரும் ரஷ்யா, நவீன ஜெட் விமானங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. எனினும் பழைய சிறியரக விமானங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதே அடிக்கடி விபத்து நேரிடக் காரணம் என்பது துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
விமானம் விபத்தில் சிக்கிய காரணம் இன்னும் தெரியாத நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டு, உண்மையான காரணத்தைக் கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது.