பிரதமரின் வருகையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள பகுதியில் தூய்மைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வரும் 27ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தரவுள்ளார்.
இதற்காக, கங்கைகொண்ட சோழபுரத்தில் முன்னேற்பாடு பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் பிரதமர் மோடி வரவுள்ளதால் குருவாலப்பர் கோயில் பகுதியில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பிரதமர் ரோடு ஷோ செல்லும்போது மக்கள் நின்று பார்க்கும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் வேலி அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மத்திய குழுவினர் தங்குவதற்காக குருவாலப்பர் கோயில் ஊராட்சிமன்ற அலுவலகம் எமர்ஜென்சி கெஸ்ட் ஹவுஸாக பயன்படுத்தப்பட உள்ளதால், அங்கும் ஊழியர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் முதல் குருவாலப்பர் கோயில் பகுதி வரை மத்திய குழுவினர், மத்திய பாதுகாப்புப் படையினர், இசட் பிளஸ் பிளஸ் பாதுகாப்புப் படையினர், தமிழக காவல்துறையினர் ஆகியோர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை, நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு, அரியலூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார்.