பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் எங்கு தான் செல்கிறது? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருப்பூர் மாவட்டம், அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட கோடந்தூர் திருமூர்த்திமலை கிராமத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ஐயா காமராஜர், எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இன்று வாழவே முடியாத நிலைக்கு சிதிலமடைந்திருந்தும், வேறு வழியின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் வசித்து வருகிறார்கள் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள்.
வீடுகள் இடிந்து, மின்சார வசதி, சரியான குடிநீர் வசதி, முறையான சாலை வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக அவதிப்பட்டு வரும் மக்கள், அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கைகள் பல விடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை.
திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தான் ஆச்சரியம். வருவாய்த்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு 110 வீடுகளைப் புதுப்பித்துத் தரப் பழங்குடியினர் நல ஆணையம், ஆதி திராவிடர் நலத் துறைக்குப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் நிலையில் ஒன்றரை வருடங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையோ, நிதியோ ஒதுக்கப்படவில்லை என்று மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கூறியிருப்பது மலைவாழ் மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் திமுக அரசிற்கு இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளது.
2022 ஆம் ஆண்டு வரை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் திருமூர்த்திமலை மக்கள், முதல் முறையாக வாக்களித்து தங்களில் ஒருவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து பஞ்சாயத்து மூலம் வீடுகளைப் புதுப்பிக்கத் தீர்மானம் நிறைவேற்றி காலங்கள் பல ஆகியும் அவர்களின் நிலைமை மாறவில்லை.
எளிய மக்களுக்கான நமது பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களான பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன், பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் எங்கு தான் செல்கிறது? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
உடனடியாக திருமூர்த்திமலை மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிட வேண்டும். மேலும், இது போன்ற, மற்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.