இந்தியா – இங்கிலாந்து இடையே மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தடையற்ற வர்த்தகம் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகள் இடையிலான வர்த்தகத்தை 120 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் இந்தியா – இங்கிலாந்து இடையே உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் கெய்டர் ஸ்டார்மெரை சந்தித்த பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமாக விவாதித்தார்.
அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இங்கிலாந்து அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியா – இங்கிலாந்து இடையே பொருளாதார ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக கூறினார். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே, இரு நாடுகளுக்கும் இடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளைக் குறைப்பது அல்லது முழுமையாக நீக்குவதுதான்…. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் இங்கிலாந்திலும், இங்கிலாந்துப் பொருட்கள் இந்தியாவிலும் மலிவான விலையில் கிடைக்கும்,
இந்திய ஏற்றுமதியில் 99% பொருட்களுக்கு இங்கிலாந்தில் வரி விலக்கு அல்லது வரி குறைப்பு கிடைக்கும் என்பதால், ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள், வாகன உதிரி பாகங்கள், விவசாய உற்பத்திப் பொருட்கள் அதிக லாபம் ஈட்ட முடியும். அதே நேரத்தில் இவ்வகை பொருட்கள் இந்தியாவில் மலிவு விலையிலும் கிடைக்கும்.
இந்தியாவில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதித்துறைக்கு உத்வேகம் அளிக்கும் இந்த ஒப்பந்தம், இங்கிலாந்து சந்தைகளில் ஐரோப்பிய பொருட்களுக்கு நிகராக இந்திய வேளாண் பொருட்கள் போட்டியிடும் நிலையை உருவாக்கும்.
இந்திய ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்து சந்தைகளில் கூடுதலாக 5 சதவிகித இடத்தை கைப்பற்றி அதிக லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் என்ஜினியரிங் துறைகள் 2030ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு வளர்ச்சியைப் பெறும் என்றும், அடுத்த நிதியாண்டில் ரசாயன ஏற்றுமதி 40 சதவிகித வளர்ச்சியைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஆபரண ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்றும், புதிய ஒப்பந்தத்தால், சேவைத்துறையும் ஆண்டுக்கு 20 சதவிகித வளர்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதால், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.5 பில்லியன் டாலர்கள் கூடுதல் வருமானத்தைப் பெறும். இங்கிலாந்து நுகர்வோர்கள், குறைந்த விலையில் இந்தியப் பொருட்களைப் பெற முடியும். ஸ்காட்ச் விஸ்கி மீதான இறக்குமதி வரி 150 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாகவும், பின்னர் படிப்படியாக 40 சதவிகிதமாகவும் குறைக்கப்படும் என்பதால் இந்தியாவில் அதன் விலை குறைந்து விற்பனை அதிகரிக்கும். இதேபோன்று மின்சார வாகனங்களுக்கான வரி 110 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்பதால் அதன் விலையும் குறையும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்து கையெழுத்திட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு இந்த புதிய ஒப்பந்தம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.