மாநிலங்களவையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நன்றி தெரிவித்தார்.
மாநிலங்களவை எம்.பி.க்களான திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வியாழக் கிழமையுடன் நிறைவடைந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.
இதனால் 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வைகோ, வியாழக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். தனது ஓய்வு நாளையொட்டி மாநிலங்களவையில் உரையாற்றிய வைகோ, காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் பெயருடன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரையும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, வைகோவை வழியனுப்பி வைக்க விரும்பவில்லை எனவும், பாஜக கூட்டணிக்கு வந்தால் அவர் மீண்டும் எம்.பி. ஆகலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டுக்குக் குறிப்பாகத் தமிழகத்திற்கான வைகோவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ராமதாஸ் அத்வாலே கூறினார்.